வாங்க.. வாங்க... வாங்க....

Friday, January 29, 2010

இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார் -எதற்காக இத்தனை கஷ்டப்படுகிராய்?
நான் கேட்டேன்-கஷ்டபடாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார்-என்னை பார்
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன்
போரடித்தால் வண்ணதொலைகாட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன் !
உழைக்காமல் எப்படி அப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார் -நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டு குடிமகன் 
என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்
சமைப்பதற்கு கேசும் அடுப்பும் இலவசம்
பொழுதுபோக்கிற்கு வண்ண தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்
குடும்பத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும் ?
நான் கேட்டேன் -உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்தபடி உரைத்தார்
மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5000 இலவசம் சிகிச்சையுடன்
குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்
படிப்பு சீருடையுடன் மதிய உணவும் இலவசம் முட்டையுடன்
பாடப்புத்தகம் இலவசம் ,படிப்பும் இலவசம் ,பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்
தேவை என்றால் சைக்கிளும் இலவசம்
பெண் பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ருபாய் 25000 இலவசம்    ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்
தேவை என்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்
நான் எதற்கு உழைக்க வேண்டும் !?
வியந்து போனேன் நான் !!!
(நண்பர் மெயில்லில் அனுப்பிய செய்தி இது,அவருக்கு நன்றி)

இளமுருகன்
நைஜீரியா
29.01.10  5.53 a. m.

Wednesday, January 27, 2010

திருவிளையாடல்-திரைவிமர்சனம்

நீங்கள் ஏன் உங்கள் வலைப்பதிவில் இதுவரை திரைவிமர்சனமே எழுதவில்லை என்ற வாசகர்களின்(?) அன்பான வேண்டுகோளை ஏற்று நாமும் திரைவிமர்சனம் எழுதலாமே என்று அமர்ந்த போது 'எந்த படத்திற்கு எழுதுவது ?'என்ற கேள்வி எழுந்தது.நான் இருப்பது நைஜீரியா என்பதாலும் திருட்டு VCD பார்ப்பதில்லை (கிடைக்காததால்)என்ற கொள்கையாலும் சமீபத்தில் எந்த புது  படமும் பார்க்காததால் சரி ''திருவிளையாடல்'' படத்திற்கு விமர்சனம் எழுதலாமே என  தீர்மானித்தேன்.
இனி விமர்சனம் :
படம் ஒரு பழத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கிறது.'பழம்' பெறாத முருகனை சாந்தப்படுத்த சொல்லப்படும் கதையாக படம் நகர்த்தப்படுகிறது.அனைவருமே 'பழம்'பெரும் நடிகர்,நடிகைகள் என்பதால் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருகிறார்கள்.சிவாஜி கணேசனை தவிர வேறு யாராவது இதில் நடித்திருந்தால்...சிவனுக்கு இவ்வளவு புகழ் வந்திருக்குமா என்பது சந்தேகமே.

தருமி-சிவன் 'கேள்வி-பதில்'காட்சியில் சிவாஜியையே நாகேஷ் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.இந்த உண்மையான கோபத்தால் தான் பாண்டிய சபையில் நக்கீரரை  'அவன் இவன்'என சிவாஜி  பேசி நக்கீரரை நெற்றிக்கண்ணால் 'கொலை'செய்து விடுகிறார்.

ஹேமநாத பாகவதரை பாடியே துரத்தி அடிப்பது (no fight) புது யுக்தி.படத்தில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதும் ஒரு பாடல் கூட re-mix ஸ்டைலில் இல்லாமல் அனைத்து பாடல் வரிகளும் ஈஸி யாக புரிந்துபோவது ஒரு குறையாகத்தான் தெரிகிறது.

தாட்சாயணி கணவனை (சிவன்) எதிர்த்து பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது பாரதிராஜா கண்ட 'புதுமை பெண்ணாய்' மிளிர்கிறார்.இந்த சீன்களில் பெண்கள் பக்கம் விசிலும் கைதட்டலும் தூள்பறக்கிறது.

பழதிற்காக 'புசுக்' கென கோபம் கொள்ளும் முருகன் ஔவை பலமுறை 'நீ ஒரு பழம் அதுவும் ஞானப்பழம் ' என பாடும்போது 'யாரைப்பார்த்து பழம் என்கிறாய்'என முருகனுக்கு கோபம் வராதது லாஜிக் காக இடிக்கிறது.

இப்படி படத்தின் கருவான பழத்திற்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை.காட்சிகளில் ஒரு சிறிய பழமே காட்டப்படுகிறது.அதை ஞானப்பழம் என்பதை நம்பமுடியவில்லை.

இன்றைய நம் சட்டசபையில் பேசுவது போல மாமன்னர் பாண்டியன் அவையிலும் 'அவன் இவன்'என்ற ஏகவசனங்கள் இடம் பெற்றுதான் இருகின்றன.இந்த வரலாறு தெரிந்துதான் நம் MLAகள் இன்று சட்டசபையில்நடந்து கொள்கிறார்கள்  என்ற கூடுதல் தகவலும் கிடைகிறது.

ஆக மொத்தம் அருமையான கைலாய செட் அமைப்புகள்,புரியும்படியான பாடல்கள்,மந்திர தந்திர காட்சிகள் என படம் குடும்பத்தோடு பார்க்கும் படியாகவே உள்ளது.

படம் முடிந்து வெளியே வரும்போது ''ஞானபழத்திற்கு கொட்டை உண்டாப்பா?''என்று என் மகன் கேட்ட கேள்விக்குத்தான் இன்றுவரை எனக்கு பதில் தெரியவில்லை.உங்களுக்கு...?
இளமுருகன்
நைஜீரியா
27.01.10   11.00 a.m.

Monday, January 25, 2010

பிச்சை ராமாயணம்

  1. பிறக்கும் போதே யாராவது 'பிச்சைக்காரன்'என்று பிறப்பதுண்டா?அப்படி பிறக்க யாருக்காவது விருப்பம்தான் இருக்குமா?அப்படி இருக்க பிச்சை எடுக்க நேர்வது எப்படி?பொறுப்பற்ற பெற்றோர்களா அல்லது பெற்றோர் யாரென்று தெரியாமல் பிறப்பதாலா?
  2. நாம் கோபத்தில் 'பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்வேன்'என்று சொல்கிறோம் ,அது அவ்வளவு எளிதென்றா நினைக்கிறீர்கள்?
  3. பிச்சை எடுக்க நேர்ந்த அந்த முதல் நாள்,அந்த முதல் பிச்சையின் அவமானம் ஏற்படுத்திய வடு வாழ்நாளில் மறக்ககூடியதா?
  4. உங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் அல்லது ஒரு வேளை உணவாவது பிச்சை எடுத்து சாப்பிட்டு  இருக்கிறீர்களா?
  5. முதல் சம்பளம் வாங்கிய நாள்,திருமண நாள்,பிறந்த நாள் போல பிச்சை எடுத்த முதல் நாளும் மறக்க முடியாததாய் தானே இருக்கும்?
  6. பிறருக்கு உரியதை தெரியாமல் திருடுவதை காட்டிலும் பிச்சை கேட்பது உயர்ந்ததாக தெரிய வில்லையா?
  7. நீங்கள் சாப்பாட்டில் கை வைக்கும் போது சற்று முன் 'ஐயா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு ஏதாவது தருமம் பண்ணுங்க 'என்ற குரல் ஞாபகத்தில் வந்ததுண்டா?
  8. எந்த பாத்திர கடையிலாவது பிச்சைப்பாத்திரம் என்று விற்கிறார்களா?
  9. ஐஸ் கிரீம் ,பொம்மை,ஒயிட் யூனிபார்ம் என பிச்சை எடுக்கும் குழந்தைக்கும் கனவாய் போன ஆசைகள் இருக்கும் தானே?
     10.பிச்சைகாரர்களிடமிருந்தே திருடுபவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்?

இளமுருகன்
நைஜீரியா
25.01.10  5.20 p.m.
        

கடன் கொடுத்தான் நெஞ்சம் போல...

நானும் அவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.ஒருவர்மேல் ஒருவர் நல்ல மரியாதை வைத்திருந்தோம்.பார்க்கும்போதெல்லாம் நட்புடனும் பாசத்துடனும் நலம் விசாரித்துக்கொள்வோம்.இதெல்லாம் நான் அவருக்கு கடன் கொடுக்கும் முன் வரை.
ஒரு நாள் தயங்கி தயங்கி 'சார்,ஒரு அவசரம்.. ஆயிரம் ரூபா கடனா கிடைக்குமா...மூணு நாள்ல திருபிடறேன்' என்றார்.
''அதற்கென்ன சார்,இவ்வளவு நாள் பழகிஇருக்கோம் இது கூட பண்ணாமலா''
என்று ஆயிரம் கொடுத்தேன்.இதோடு சும்மா இருந்திருக்கலாம்.
''ஆமாம் அப்படி என்ன சார் அவசரம்.. தெரிஞ்சுக்கலாமா''
'' நாளைக்கு பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள் ஆக்சுவல்லா ரெண்டாயிரம் கட்டணும் அதான்..மாச கடைசி உங்க கிட்ட இதுக்கு மேல கேட்க கூடாது மீதிக்கு நான் பார்த்துக்கிறேன்''
''என்ன சார் இது எப்படியும் இன்னும் மூணு நாள்ல திருப்பிட போறிங்க ஒரு வழியா என்கிட்டயே கேட்ககூடாதா? இன்னும் ஆயிரத்துக்கு எங்க போய் நிப்பிங்க இந்தாங்க''என்று இன்னும் ஆயிரம் கொடுத்தேன்.
அடுத்து ஒரு வாரத்துக்கு அவரை பார்க்க முடியாதபோது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பின் எனக்கு பணமுடை வந்த போது நண்பர் ஞாபகத்துக்கு வந்தாரே ஒழிய நண்பர் நேரில் வரவில்லை.அப்போதுதான் அவர் என்னை பார்ப்பதை தவிர்க்கிராறோ என்ற ஐயம் எழுந்தது.
கடன் கொடுத்த பத்தாவது நாள் நண்பரை சந்தித்தேன்.இந்தமுறை அவரை வழக்கம் போல எதிர்கொள்ள முடியவில்லை.அவரும் குற்ற உணர்வுடனே பேசினார்.'சாரி சார்,வெளியூர் போய் இருந்தேன் அதான்'
'பரவா இல்லை சார் எனக்கு இப்ப பணம் தேவைப் படுது அதான் திருப்பிட்டிங்கன்னா பரவா இல்லை'
'சார்...இன்னும் ஒரு ரெண்டு நாள் பொறுக்க முடியுமா' என்றுஇழுத்தார்.
'இல்ல சார் மூனு நாள் சொன்னிங்க இப்ப பத்து நாளைக்கு மேல ஆச்சு' என்று முகம் பார்க்காமல் பேசினேன்.
'சொன்னேன் ஆனா முடியல,கொஞ்சம் பொறுத்துக்குங்க'
மீண்டுன் அதன் பின் அவரை பத்து நாள் பார்க்க முடியாதபோது எரிச்சல் வந்தது.எரிச்சல் ஆத்திரமாகி கோபமானது.பின் சந்தித்த நாட்களில் காரணங்கள் தான் சொன்னாரே ஒழிய பணம் வந்தபாடில்லை.'இவனுக்கு'ஏன்டா கடன் கொடுத்தோம் என்றாகிவிட்டது.கடன் வாங்கிய துரையே கடன் கொடுத்த நாயே என்பது போல நடையாய் நடந்து அவன் வீட்டில் இல்லாதபோது அவன் மனைவியிடம் கோபப்பட வேண்டியதாயிற்று.
கடைசியாய் கசப்புடன் பணம் பல தவணைகளில் வசூலிக்கப்பட்டாலும் மன உளைச்சலும் நட்பு இழந்ததும் தான் மிச்சம்.நான் கடன் கொடுத்து இழந்த நட்புகள் இதுபோல் பல.நான் இல்லை என்று நழுவி இருந்தால் அவ(ன்)ர் நட்பாவது மிஞ்சி இருக்குமோ?
நண்பர்களே...கடன் கொடுப்பது ஒரு உதவி தானே?உதவி செய்வதால் ஏன் உபத்திரவம் வருகிறது?நண்பர்களை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கடன் கொடுக்க கூடாது என்ற கசப்பான உண்மை உண்மைதானா?அல்லது கடன் கொடுத்தால் அதை மறந்து விட வேண்டுமா? ''Neither a borrower nor a lender be;loan oft loses both itself and friend'' என்பது எல்லா நேரத்திலேயும் சரியா?
இளமுருகன்
நைஜீரியா
25.01.2010
12.30.A.M.

Saturday, January 23, 2010

இது புரியுதா பாருங்க!

நான் ஒன்றும் 'இலக்கிய பேரொளி'இல்லை என்றாலும் ஏதோ அதில் ஒரு ஒட்டு உறவு இருக்கிறது.முதலில் லா.ச.ராமாமிர்தம் படித்தபோது சில ஏன் பல இடங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்த போது நமக்குதான் 'ஞானம்'போதவில்லை என்று தேற்றிக்கொண்டேன்.அதையாரிடமும் சொல்லிகொள்ளவில்லை.'புரியவில்லை'என்றால் நம் கொஞ்ச 'அறிவும்'சந்தேகத்திற்கு இடமாகிவிடுமே!பின்னாளில் பலர் இப்படி 'அவர் புரியாத'புதிராக எழுத கூடியவர்தான் என்று ஓபனாக சொன்னதும் 'எனக்கும்'என்று என்னையும் இணைத்துக்கொண்டேன்.இப்படி எப்போதுமே நமக்கு யாராவது எடுத்துகொடுக்க ஆள் தேவைப்படுகிறது.

பின் நாட்களில் ஜெயகாந்தன்,பாலகுமாரன்,அசோகமித்திரன்,பிரபஞ்சன் எல்லாம் படித்தபோது சில இடங்கள் நின்று படிக்க வேண்டி இருந்தது.மனம்,புத்தி என்றதும் உடனே புரியாதது 'குடிக்கிறது தப்புன்னு புத்திக்கு தெரியுது ஆனால் மனசு கேட்க மாட்டேங்குதே'என்றதும் உடனே புரிந்தது.பிறகு கோணங்கி படிக்க நேர்கையில் மீண்டும் என்மீது சந்தேகம் வந்து விட்டது.சாரு நிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி'படிக்கையில் அது ஒரு செக்ஸ் புக் என்றே முதலில் நினைத்தேன்.முன்னுரையே மிரட்டி எடுத்து விட்டது.கடைசிவரை என்ன சொல்ல வருகிறார் என என் அறிவுக்கு புரியவில்லை.

இப்படிதான் மாடர்ன் ஆர்ட்டும்,எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று.ஒரு வேளை நம் 'மசால்'அவ்வளவுதான் என நினைத்து கொண்டாலும் அதில் ''ஏதோ''இருக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்.ஒருமுறை இசைமேதை எஸ்.ராஜம் சொன்னது போல ''அவங்க யோசிச்சு படம் போடுறாங்களா இல்ல படத்தபோட்டுட்டு அதுக்கு விளக்கம் யோசிப்பாங்களான்னு'' ஒரு சந்தேகம் உண்டு.

அவார்ட் வாங்குற படம்கூட 'புரியாத' படம்தான்.ஒரு வேளை எல்லோர்க்கும் புரிந்து போய் இருந்தால் அவார்ட் கூட கிடைச்சி இருக்காதோ?.கூட்டத்துல கூட புரியாம பேசுனா ஏதோ டீப்பா பேசுறதாஒரு நினைப்பு வந்து விடுகிறது.நம்மள விட அறிவாளின்னு மனசு நினைத்துகொள்கிறது.

சில கவிதைகள் கூட இப்படி தான் புரிய மாட்டேன்கிறது.இத்தனைக்கும் அதுவும் என் தாய் மொழி தமிழில் தான் எழுதப்பட்டிருகிறது.ஒருவேளை கவிதை எழுதும் போது கற்பனை அளவுக்கு மீறி மொழி தாண்டி போய் விடுகிறதோ?

நண்பர்களே...இதில் குறை எங்கே இருக்கிறது?என் அனுபவ பற்றாக்குறையா அல்லது 'புரியாத' அந்த ஒன்றுக்கு ஏதாவது ஸ்பெஷல் அறிவை வளர்த்துகொள்ளதாதா?இந்த அனுபவம் உங்களில் யாருக்காவது ஏற்பட்டிருக்கிறதா,அப்படி இருந்து அதில் இருந்து மீண்டிருந்தால் அந்த உக்தியை பகிர்ந்து கொள்வீர்களா?

இப்படிக்கு
புரிந்தும் புரியாத புரிந்ததுபோல புரிந்துகொள்ளும்
இளமுருகன்.

குழந்தைகள்


பொய் சொல்லல் ஆகாது என்றதும் குழந்தை பொய் என்றால் என்ன என்றது
இப்போது நான் பொய் சொல்லிக்கொடுக்க வேண்டியதாய் போயிற்று



குழந்தைகள் தெய்வம் என்றால்
''நான்(னு)ம் கடவுளாய்'' இருந்திருக்கிறேன் தானே?





குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது இருக்கட்டும்
அதற்கு முன்
அவர்களிடமிருந்து கற்றுகொள்வோம் வாருங்கள்

Wednesday, January 20, 2010

இன்றைய வலைப்பதிவு உலகம் அசர அடித்து கொண்டு இருக்கிறது. RADAN போன்ற பெரிய நிறுவனங்கள் வலைபதிவர்களை 'வலை' போட முயற்சிபதிலிருந்தே இது தெள்ளென தெரிகிறது.எனவே வலை பதிவர்கள் எச்சரிகையுடனம் பொறுப்புடனும் எழுதவேண்டிய நேரம் இது.பத்திரிக்கை எப்படி சமூகத்துக்கு நாலாவது தூணோ அதுபோல வலைபதிவு ''ஐந்தாவது தூண்''

Sunday, January 17, 2010

அறிமுகம்

வணக்கம் அன்பு தமிழ் உள்ளங்களே...முதன்முதலாய் இன்று இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன்.அன்பு கரம் நீட்டி ஆதரவு தரவும்,உற்சாகபடுத்தவும் வேண்டுகிறேன்.
அன்புடன்...
இளமுருகன்.

இன்றைய தலைப்பு செய்திகள்