வாங்க.. வாங்க... வாங்க....

Sunday, March 28, 2010

எர்த் அவர் (Earth Hour)

நேற்று எர்த் அவர்  (இரவு 8.30-9.30)அனுசரித்தீர்களா?நான் ஏதோ என்னால் முடிந்த மட்டும் என் அறையின் அனைத்து விளக்குகளையும் மின் விசிறி, எ.சி. போன்றவற்றை நிறுத்தி வைத்தேன். சில நண்பர்களுக்கும் சொன்னேன்.அந்த ஒரு மணி நேரத்தில் நான் தங்கி இருக்கும் காலணியை ஒரு ரவுண்டு வந்தேன்.வழக்கம் போல எங்குமே மின் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.இத்தனைக்கும் இங்குள்ள அனைவருமே எஞ்சினியர் லெவலில் இருப்பவர்கள்.யாருக்குமே இப்படி ''எர்த் அவர்'' என்று  ஒன்று அனுசரிப்பது பற்றிய அக்கறையே இருப்பதாய் தெரியவில்லை.தெரிந்திருந்தாலும் அது நமக்கல்ல யாருக்கோ என்பது போல கண்டுகொள்ளாமலும் இன்னும் 'ஆமாம் , இந்த ஒரு மணி நேரம் நிப்பாட்டிட்டா உலக வங்கி கடன அடச்சிரலாமா' என்று கிண்டலடித்துக் கொண்டும் இருந்தார்கள்.கண்டிப்பாக இந்த ஒரு மணி நேரம் நிப்பாட்டு வதால் மட்டும் ஒன்னும் ஆகிவிடாதுதான்.இது ஒரு குறியீடு,இதை வழக்கமாக கொண்டு தேவை இல்லாத போது தேவை இல்லாத மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதன் மூலம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்தவராவோம்.

நேற்று லக்னோவில் எடுத்த கணக்கெடுப்பின் படி அந்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி உள்ளது. சிறு துளிதான் பெரு வெள்ளம்.



தனி மனிதனிலிருந்துதான் எதுவுமே தொடங்க வேண்டும்.ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுவதுதான் நாளைக்கு சமுதாயத்திற்கும் ஏற்படும்.ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுவதை ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டதாக எண்ணி குரல் கொடுக்க முன்வர வேண்டும்.ஏற்கனவே கூட்டு குடும்பம் சிதைந்து தனி குடும்பம் என தனி   தனி  தீவாக வாழும் நமக்கு சமுதாயத்தின் உதவி கண்டிப்பாக தேவை.ஆகவே நீங்கள் ஒருவருக்கு குரல் கொடுத்தால் தான் நாளை உங்களுக்கு ஒருவர் குரல் கொடுப்பார் என்பதை மறந்து விடாதீர்கள்.எனவே ''உங்கள் சுயநலத்திற்காகவாவது சமுதாய நலனை பேணுங்கள்''


எர்த் அவரில் என்ன செய்தாய் என்றேன் நண்பனிடம்
விளக்கணைத்தேன் என்று விளக்கமளித்தான்
அது தெரியும்
எர்த் அவரை எப்படி கழித்தாய் என்றேன்
விளக்கெண்ணெய் மாதிரி கேட்காதே
என்று விழி சொடிக்கினான்
மெல்ல புரிந்தது மேஜிக் -அவன்
'எர்த் அவர்'ஐ 'வொர்த் அவர்'  ஆக்கிக் கொண்டது.

அன்புடன்...
இளமுருகன்
நைஜீரியா
28.03.2010   7.40 p.m.

Thursday, March 11, 2010

நைஜீரியா பதிவர் சந்திப்பு 11.02.2010

'கற்றோரை கற்றோரே காமுறுவர்' என்பது போல எழுத்தின் மூலம் என்னை கண்டுகொண்டு ஆதரவு தந்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி.முன் பின் தெரியாமல் வெறும் எழுத்தின் மூலம் அறிமுகம் ஆகும் நட்பு சுவாரஸ்யமானது.எழுத்தின் வழி ஒருவர் மீது அன்போ வெறுப்போ கொள்வது எழுதும் எழுத்துக்கு கிடைக்கும் மரியாதை.அப்படி ஒரு மரியாதை எனக்கு கிடைத்தது.அண்ணன் நைஜீரியா ராகவன் என்னை விருந்துக்கு அழைதார் என்பதை நான் இப்படிதான் எடுத்து கொள்வேன்.

சென்ற பிப்ரவரி 11  ம் தேதி நான் விடுமுறைக்கு இந்தியா செல்ல இருந்தேன்.அண்ணன்  ராகவன் மற்றும் அணிமா (யோக்பால்) 'ஆன் தி வே' யில் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.நான் இணையத்திலும் அலைபேசியிலுமே அறிந்திருந்த இரு பெரும் தலைகளை(!) நேரில் சந்திக்க இருந்ததில் ஒர் உற்சாகம் + ஆர்வம் + எதிர்பார்ப்பு + பதற்றம்+பயம்  (பெரும் தலைகள் ஆயிற்றே) எல்லாம் இருந்தது.

நான்  கற்பனை செய்திருந்ததைவிட இளமையாகவே இருந்தார் ராகவன் அண்ணன்.மிக இயல்பாக, பழகிய சிறுது நேரத்திலேயே ஏதோ பத்தாண்டு பழக்கம் போல பேச ஆரம்பித்து விட்டார்.மதிய சாப்பாடு அவர் வீட்டில் தான்.அவருக்கு மேல் அவர் துணைவியார் அன்பாய் இருந்தார்.இருவரும் மாறி மாறி பரிமாறினார்கள்.நான் தனியன்.கூட பிறந்தவர்கள் கிடையாது .அந்த கணத்தில் ஒரு அண்ணன் இருந்திருந்தால்...இப்படிதான் இருக்குமோ என்று நினைத்து கொண்டேன்.

                 அடியேன்,அண்ணன் நைஜீரியா ராகவன் மற்றும்  யோக்பால்

அவர்  வீட்டு தோட்டம் பற்றி ப்ளாக்கிள் எழுதி இருந்ததை படித்திருந்ததால்
வெளியில் வந்து ஆர்வமாக பார்தேன்.வீடும் மிக்க நேர்த்தியாக வைத்திருந்தார்கள். .ராகவன் அண்ணன் என்னை வீட்டில் ஓய்வு எடுக்க சொல்லி விட்டு ஆபீஸ் போய் விட அவர் மகன் அரவிந்த் மற்றும் துணைவியாருடன் பேசிக்கொண்டிருந்தேன்.அர்விந்த்தின் பரந்துபட்ட அறிவில் மயங்கினேன்.மாலை நண்பர் யோக்பால் அவர் நண்பர் சோஜனுடன் வந்து சேர்ந்ததுமே உற்சாகம் தொற்றிக்கொண்டது.
                                                                                    நண்பர் சோஜன்

எங்கோ ஆரம்பித்த பேச்சு சினிமா ,அரசியல் என சென்றது.வேறு என்னதான் பேச இருக்கிறது?ஆனாலும் நண்பர் சோஜன் பேச்சில் ஆழம் இருந்தது.குறிப்பாக தெலுங்கானா பற்றிய அவருடைய பேச்சு சிந்திக்க வைத்தது.அண்ணன் நைஜீரியா ராகவன் ஆகட்டும் யோக்பால் ஆகட்டும் அடடா...நிறைய படிக்கிறார்கள் ! உலக நடப்பை உற்று கவனிக்கிறார்கள்.நான் அவர்களின் பேச்சை கவனித்து கொண்டு மயங்கி இருந்தேன் (ஐயய்யோ...நான் ஒன்னும் குடிக்கலீங்க!!!)

இரவு  உணவு சாப்பிட்டு விட்டு ராகவன் சார் வீட்டிலிருந்து பிரிய மனமின்றி கிளம்பி நண்பர் யோக்பால் மற்றும் சோஜனுடன் கெஸ்ட் ஹவுஸ்  சேர்ந்தேன்.
இரவு  நெடு நேரம் இந்த புது உறவுகளை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அனைவரையும் தம் உறவுகள் போல் பேசும் ராகவன் அண்ணன் குடும்பம் ,தூக்கம் கெட்டு காலையில் எனக்காக ஏர்போர்ட் வரை வந்து வழி அனுப்பிய நண்பர் யோக்பால் ...இப்படி எத்தனை இனிமையான மனிதர்கள் ...இவர்களுக்கு நன்றியை தெரிவிப்பது எப்படி?வாழ்கை பயணத்தில் நிறைய பேரை சந்திக்கிறோம் ...சிலரே மனதில் நிற்கிறார்கள்.

அன்புடன்...
இளமுருகன்
நைஜீரியா 
11.03.2010 8.40 a.m. 

இன்றைய தலைப்பு செய்திகள்