வாங்க.. வாங்க... வாங்க....

Wednesday, February 10, 2010

அவனா இவன்?!

சிறு வயதில் என் லட்சியம் எல்லாம் 'நாம் ஒரு டிரைவர்'ஆகிவிட வேண்டும் என்பதுதான்.எங்கள் ஊருக்கு முதல் நாள் பஸ் வந்த போது ஏதோ நானே சொந்தமாய் பஸ் வாங்கிவிட்ட ஒரு சந்தோசம்.எங்கும் அதே பேச்சு.வித விதமாய் ஹாரன் அடிப்பது,அனைவருமே டிரைவருக்கு  டாட்டா காட்டுவது இப்படி  டிரைவர்ஆகிவிட எனக்கு நிறைய காரணங்கள் இருந்தன.

பின் நான் ஒரு ஆசிரியன் ஆகிவிட விரும்பினேன்.என் அப்பாவிடம் டியூஷன் படிக்க நிறைய பேர் வருவார்கள்.அப்பா வீட்டில் இல்லாத போது நான்தான் சமாளிப்பேன்.சொல்லிக்கொடுப்பது,விடைத்தாள் திருத்துவது முக்கியமாக மார்க் போடுவது என்று ஒரு பத்து பேர் நம் கையில் இருக்கிறார்கள் என்பதில் ஒரு கிரக்கம்.வெளியில் பார்க்கும்போது 'வணக்கம்' வாங்குவது பெருமையாய் இருக்கும்.இதனாலேயே ஆசிரியர் ஆகிவிட விருப்பப்பட்டேன்.

டீன் ஏஜ் பருவத்தில் நிறைய டிடெக்டிவ் நாவல்கள் படிக்க நேர்ந்த போது தமிழ்வாணனின் சங்கர்லால் ,ராஜேஷ்குமாரின் விவேக்,சுபாவின் நரேந்திரன்,சுஜாதாவின் வசந்த்,பி.கே.பி.யின் பரத் போல ஒரு சி.ஐ.டி. ஆகி விட விரும்பினேன்.அவர்கள் சாகசம்,நுண்ணறிவு இவை எல்லாம் பிரமிப்பை
ஏற்படுத்தின.அப்போதெல்லாம் வீட்டில் சாதாரண விசயங்களை கூட சந்தேக கண்ணுடனேயே பார்த்து 'ட்ரைனிங்'  எடுத்தேன்.

அதன் பின் கல்லூரியில் வேதியியல் பட்டம் முடித்து கெமிக்கல் கம்பனியில் வேலைக்கு சேர்ந்து CHEMICAL LAB,ANALYSIS,REACTION என்று ஒரு போதை இருந்த போது விஞ்ஞானி ஆக விரும்பினேன். வேதியியல் பலருக்கு கடினமான பாடம் என்பதால் அதில் சாதித்து கலாம் போல 'விஞ்ஞானி' ஆகி விடலாம் என்பது எண்ணமாய் இருந்தது.

பின் ஒரு தமிழ் பற்றுள்ள சுதந்திர போராட்ட வீரரின் (திரு.தி.சு.கலியானராமன்) தொடர்பு கிடைத்த போது வேலையை எல்லாம் விட்டு விட்டு முழு நேர இலக்கிய வாதி ஆகிவிட விரும்பினேன்.அவரின் பாண்டித்யம் என்னை கிரங்க அடித்தது.

இப்படி இன்னும் ஏதோதோ விருப்பங்கள் காலத்திற்கும் மாறிக்கொண்டே இருந்தது.காலம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் என்பது பின்னர் புரிந்தது.இன்னும் கூட வகுப்பறைகளில் ''பிற்காலத்தில் என்னவாக ஆசைபடுகிறாய்''என்று ஆசிரியர் கேட்கும் போது அன்றைய தேதியில் எது நம்மை ஆட்கொள்கிறதோ அதையே தேர்ந்தெடுத்து 'அதாக ஆசை' என்று பதிலளிகிறார்கள்.

இன்று நம்மில் எத்தனை பேர் நாம் விரும்பியதாய் இருக்கிறோம்?படிக்க விரும்பியது ஒன்றாக இருக்க கிடைத்ததை படித்து விட்டு வாழ்கையை ஒரு ஏக்கத்தோடே வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி உள்ளது.''நான் நினைத்ததை படித்தேன்,விரும்பியவளை மணந்தேன்,பிடித்த வேலை கிடைத்தது,பிடித்த ஊரில் செட்டில் ஆகி விட்டேன்'' இப்படி யாராவது சொல்ல கேட்க ஆசையாய் இருக்கிறது.

இளமுருகன்
நைஜீரியா
10.02.2010  7.30 a.m.

Saturday, February 6, 2010

எல்லாமே வியாபாரம்தான்!

வாரம் ஒருமுறை வீட்டிற்கே வந்த வளையல்காரர்,புளி வியாபாரம் செய்தவர் ,மிளகாய் விற்றவர்,மாட்டு வண்டியில் வைத்துஉப்பு விற்றவர்,சைக்கிள் வைத்து பொரிகடலை விற்றவர் இவர்களும் 'பிசினஸ் மேன்'கள்தான்.என்ன ஒன்று இவர்கள் பிழைக்க தெரியாத நேர்மையான பிசினஸ்மேன்கள்.கள்ளம் கபடமற்ற வியாபாரிகள்.வரும் லாபத்தில் திருப்தி கொண்டவர்கள்.

அப்பொழுதெல்லாம் எங்கள் ஊருக்கு ஒரு வளையல் வியாபாரி வருவார்.வாரம் ஒருமுறை என்று கணக்கு.ஒரு மர பெட்டியில் வண்ண வண்ண வளையல்கள் பிளாஸ்டிக் வளையல்,மண் வளையல்,கவரிங் வளையல் இன்னும் பலப்பல வகை வளையல்கள்.அவரை யாரும் ஒரு வியாபாரியாய்மட்டும் பார்ப்பதில்லை.விற்பவர் வாங்குபவர் உறவையும் தாண்டி ஒரு நட்பு இருந்தது.'இது  மண் வளையல்மா..குழந்தைக்கு வேண்டாம்' என்று வியாபாரம் தாண்டி பேசுவார்.

வீணாய்போன எதையும் தலையில் கட்ட மாட்டார்கள்.நாளைக்கு முகத்தில் விழிக்கணுமே என்று உண்மைக்கு பயப்படுவார்கள்.மிளகாய்காரர் 'கொஞ்சம் பொறுங்க அடுத்த மாசம் புது சரக்கு வருது அப்ப வாங்கலாம் 'என்பார்.இன்று அப்படி யாரையாவது பார்க்க முடிகிறதா?எப்போது இவர்கள் மாறிப்போனார்கள்?

இன்று.. இன்றைய வியாபாரம் முடிந்தால் சரி,எவனோ எப்படியோ போகிறான் என்ற எண்ணமே உள்ளது.எதிலுமே வியாபார நோக்கமே பிரதான படுகிறது.வாங்கி வீட்டிற்கு வருவதற்குள் உதவாக்கரையாய் போகும் பொருட்கள்.சீனா பொருள் தரமில்லை என்று தெரிந்துமே வாங்கி புலம்பாமலா இருக்கிறோம்?போன வாரம் கூட ஆந்திராவில் சீனா போன் பேசிக்கொண்டிருக்கும் போதே வெடித்து ஒரு பெண் இறந்தது போனது தெரியாமலா இருக்கிறோம்?

வியாபாரி நம்மை தேடி வரும்போது விற்பதற்கு அவனுக்கு ஒரு ஞாயமான பயம் இருந்தது.சரியில்லை என்றால் அடுத்தமுறை போக முடியாது என்று பயந்தான்.ஆனால் இன்று நாம் ஷாப்பிங் மால்,டிபார்ட்மென்ட்டல்ஸ்டோர் என்று அவர்களை தேடி போகும்போது அந்த உண்மையான வியாபாரிக்கு இருந்த 'மன நேர்மை'காணாமல் போய் விடுகிறது.நாமே ஒரு கட்டத்தில் விலை அதிகமுள்ள பொருளே நல்ல பொருள் என்ற எண்ணமும் கொண்டு விடுகிறோமே?

இங்குதான் நல்ல வியாபாரி மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.ஒன்று வியாபார தொழிலை விட்டு  விடுகிறான் அல்லது அவனும் கலப்படம் செய்ய தொடங்குகிறான்.இப்படி அவனை தூண்டுவது நாமல்லவா?இன்று குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடரில் கூட கலப்படம்.லாபம்தான் நோக்கம்.லாபத்தில் திருப்தி இல்லாதவனாக இருக்கிறான் இன்றைய வியாபாரி.

இவர்கள் மாறினார்களா அல்லது நாம் தான் இவர்களை மாற்றினோமா?

''ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்''என்பதையும் ''தள்ளுபடி''என்பதையும் என்று நாம் நம்ப ஆரம்பித்தோமோ அன்று உண்மை வியாபாரி திகைத்து போகிறான்.இது எப்படி சாத்தியம்?ஒன்று வாங்கினால் மற்றொன்றை எப்படி இலவ மாக கொடுக்க முடியும் என்றும் முதல் போட்டுவாங்கி அதைஎப்படி தள்ளுபடி செய்து விற்க முடியும் என்றும் உண்மை வியாபாரி தலையை பிய்த்துகொள்கிறான்.இதை ஏன் யாருமே உணர மறுக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறான்.

உரித்த வெங்காயம் ,உரித்த பூண்டு,அரைத்த இட்லி மாவு என ஹை-டெக்காக இருக்கும்  நமக்கு  இதையெல்லாம் யோசிக்க நேரம் எங்கே இருக்கிறது?
''பத்துங்றத இருபதுன்னாலும் பரவால்ல எனக்கு உடனே வேணும் ''என்று வியாபாரிக்கே ஐடியா கொடுப்பவர்கள் அல்லவா நாம்?

இளமுருகன்
நைஜீரியா
06.02.2010  5.10 P.M.

இன்றைய தலைப்பு செய்திகள்