வாங்க.. வாங்க... வாங்க....
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, January 25, 2010

கடன் கொடுத்தான் நெஞ்சம் போல...

நானும் அவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.ஒருவர்மேல் ஒருவர் நல்ல மரியாதை வைத்திருந்தோம்.பார்க்கும்போதெல்லாம் நட்புடனும் பாசத்துடனும் நலம் விசாரித்துக்கொள்வோம்.இதெல்லாம் நான் அவருக்கு கடன் கொடுக்கும் முன் வரை.
ஒரு நாள் தயங்கி தயங்கி 'சார்,ஒரு அவசரம்.. ஆயிரம் ரூபா கடனா கிடைக்குமா...மூணு நாள்ல திருபிடறேன்' என்றார்.
''அதற்கென்ன சார்,இவ்வளவு நாள் பழகிஇருக்கோம் இது கூட பண்ணாமலா''
என்று ஆயிரம் கொடுத்தேன்.இதோடு சும்மா இருந்திருக்கலாம்.
''ஆமாம் அப்படி என்ன சார் அவசரம்.. தெரிஞ்சுக்கலாமா''
'' நாளைக்கு பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள் ஆக்சுவல்லா ரெண்டாயிரம் கட்டணும் அதான்..மாச கடைசி உங்க கிட்ட இதுக்கு மேல கேட்க கூடாது மீதிக்கு நான் பார்த்துக்கிறேன்''
''என்ன சார் இது எப்படியும் இன்னும் மூணு நாள்ல திருப்பிட போறிங்க ஒரு வழியா என்கிட்டயே கேட்ககூடாதா? இன்னும் ஆயிரத்துக்கு எங்க போய் நிப்பிங்க இந்தாங்க''என்று இன்னும் ஆயிரம் கொடுத்தேன்.
அடுத்து ஒரு வாரத்துக்கு அவரை பார்க்க முடியாதபோது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பின் எனக்கு பணமுடை வந்த போது நண்பர் ஞாபகத்துக்கு வந்தாரே ஒழிய நண்பர் நேரில் வரவில்லை.அப்போதுதான் அவர் என்னை பார்ப்பதை தவிர்க்கிராறோ என்ற ஐயம் எழுந்தது.
கடன் கொடுத்த பத்தாவது நாள் நண்பரை சந்தித்தேன்.இந்தமுறை அவரை வழக்கம் போல எதிர்கொள்ள முடியவில்லை.அவரும் குற்ற உணர்வுடனே பேசினார்.'சாரி சார்,வெளியூர் போய் இருந்தேன் அதான்'
'பரவா இல்லை சார் எனக்கு இப்ப பணம் தேவைப் படுது அதான் திருப்பிட்டிங்கன்னா பரவா இல்லை'
'சார்...இன்னும் ஒரு ரெண்டு நாள் பொறுக்க முடியுமா' என்றுஇழுத்தார்.
'இல்ல சார் மூனு நாள் சொன்னிங்க இப்ப பத்து நாளைக்கு மேல ஆச்சு' என்று முகம் பார்க்காமல் பேசினேன்.
'சொன்னேன் ஆனா முடியல,கொஞ்சம் பொறுத்துக்குங்க'
மீண்டுன் அதன் பின் அவரை பத்து நாள் பார்க்க முடியாதபோது எரிச்சல் வந்தது.எரிச்சல் ஆத்திரமாகி கோபமானது.பின் சந்தித்த நாட்களில் காரணங்கள் தான் சொன்னாரே ஒழிய பணம் வந்தபாடில்லை.'இவனுக்கு'ஏன்டா கடன் கொடுத்தோம் என்றாகிவிட்டது.கடன் வாங்கிய துரையே கடன் கொடுத்த நாயே என்பது போல நடையாய் நடந்து அவன் வீட்டில் இல்லாதபோது அவன் மனைவியிடம் கோபப்பட வேண்டியதாயிற்று.
கடைசியாய் கசப்புடன் பணம் பல தவணைகளில் வசூலிக்கப்பட்டாலும் மன உளைச்சலும் நட்பு இழந்ததும் தான் மிச்சம்.நான் கடன் கொடுத்து இழந்த நட்புகள் இதுபோல் பல.நான் இல்லை என்று நழுவி இருந்தால் அவ(ன்)ர் நட்பாவது மிஞ்சி இருக்குமோ?
நண்பர்களே...கடன் கொடுப்பது ஒரு உதவி தானே?உதவி செய்வதால் ஏன் உபத்திரவம் வருகிறது?நண்பர்களை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கடன் கொடுக்க கூடாது என்ற கசப்பான உண்மை உண்மைதானா?அல்லது கடன் கொடுத்தால் அதை மறந்து விட வேண்டுமா? ''Neither a borrower nor a lender be;loan oft loses both itself and friend'' என்பது எல்லா நேரத்திலேயும் சரியா?
இளமுருகன்
நைஜீரியா
25.01.2010
12.30.A.M.

Saturday, January 23, 2010

இது புரியுதா பாருங்க!

நான் ஒன்றும் 'இலக்கிய பேரொளி'இல்லை என்றாலும் ஏதோ அதில் ஒரு ஒட்டு உறவு இருக்கிறது.முதலில் லா.ச.ராமாமிர்தம் படித்தபோது சில ஏன் பல இடங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்த போது நமக்குதான் 'ஞானம்'போதவில்லை என்று தேற்றிக்கொண்டேன்.அதையாரிடமும் சொல்லிகொள்ளவில்லை.'புரியவில்லை'என்றால் நம் கொஞ்ச 'அறிவும்'சந்தேகத்திற்கு இடமாகிவிடுமே!பின்னாளில் பலர் இப்படி 'அவர் புரியாத'புதிராக எழுத கூடியவர்தான் என்று ஓபனாக சொன்னதும் 'எனக்கும்'என்று என்னையும் இணைத்துக்கொண்டேன்.இப்படி எப்போதுமே நமக்கு யாராவது எடுத்துகொடுக்க ஆள் தேவைப்படுகிறது.

பின் நாட்களில் ஜெயகாந்தன்,பாலகுமாரன்,அசோகமித்திரன்,பிரபஞ்சன் எல்லாம் படித்தபோது சில இடங்கள் நின்று படிக்க வேண்டி இருந்தது.மனம்,புத்தி என்றதும் உடனே புரியாதது 'குடிக்கிறது தப்புன்னு புத்திக்கு தெரியுது ஆனால் மனசு கேட்க மாட்டேங்குதே'என்றதும் உடனே புரிந்தது.பிறகு கோணங்கி படிக்க நேர்கையில் மீண்டும் என்மீது சந்தேகம் வந்து விட்டது.சாரு நிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி'படிக்கையில் அது ஒரு செக்ஸ் புக் என்றே முதலில் நினைத்தேன்.முன்னுரையே மிரட்டி எடுத்து விட்டது.கடைசிவரை என்ன சொல்ல வருகிறார் என என் அறிவுக்கு புரியவில்லை.

இப்படிதான் மாடர்ன் ஆர்ட்டும்,எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று.ஒரு வேளை நம் 'மசால்'அவ்வளவுதான் என நினைத்து கொண்டாலும் அதில் ''ஏதோ''இருக்கத்தான் செய்யும் என்று நம்புகிறேன்.ஒருமுறை இசைமேதை எஸ்.ராஜம் சொன்னது போல ''அவங்க யோசிச்சு படம் போடுறாங்களா இல்ல படத்தபோட்டுட்டு அதுக்கு விளக்கம் யோசிப்பாங்களான்னு'' ஒரு சந்தேகம் உண்டு.

அவார்ட் வாங்குற படம்கூட 'புரியாத' படம்தான்.ஒரு வேளை எல்லோர்க்கும் புரிந்து போய் இருந்தால் அவார்ட் கூட கிடைச்சி இருக்காதோ?.கூட்டத்துல கூட புரியாம பேசுனா ஏதோ டீப்பா பேசுறதாஒரு நினைப்பு வந்து விடுகிறது.நம்மள விட அறிவாளின்னு மனசு நினைத்துகொள்கிறது.

சில கவிதைகள் கூட இப்படி தான் புரிய மாட்டேன்கிறது.இத்தனைக்கும் அதுவும் என் தாய் மொழி தமிழில் தான் எழுதப்பட்டிருகிறது.ஒருவேளை கவிதை எழுதும் போது கற்பனை அளவுக்கு மீறி மொழி தாண்டி போய் விடுகிறதோ?

நண்பர்களே...இதில் குறை எங்கே இருக்கிறது?என் அனுபவ பற்றாக்குறையா அல்லது 'புரியாத' அந்த ஒன்றுக்கு ஏதாவது ஸ்பெஷல் அறிவை வளர்த்துகொள்ளதாதா?இந்த அனுபவம் உங்களில் யாருக்காவது ஏற்பட்டிருக்கிறதா,அப்படி இருந்து அதில் இருந்து மீண்டிருந்தால் அந்த உக்தியை பகிர்ந்து கொள்வீர்களா?

இப்படிக்கு
புரிந்தும் புரியாத புரிந்ததுபோல புரிந்துகொள்ளும்
இளமுருகன்.

இன்றைய தலைப்பு செய்திகள்