வாங்க.. வாங்க... வாங்க....

Monday, January 25, 2010

கடன் கொடுத்தான் நெஞ்சம் போல...

நானும் அவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.ஒருவர்மேல் ஒருவர் நல்ல மரியாதை வைத்திருந்தோம்.பார்க்கும்போதெல்லாம் நட்புடனும் பாசத்துடனும் நலம் விசாரித்துக்கொள்வோம்.இதெல்லாம் நான் அவருக்கு கடன் கொடுக்கும் முன் வரை.
ஒரு நாள் தயங்கி தயங்கி 'சார்,ஒரு அவசரம்.. ஆயிரம் ரூபா கடனா கிடைக்குமா...மூணு நாள்ல திருபிடறேன்' என்றார்.
''அதற்கென்ன சார்,இவ்வளவு நாள் பழகிஇருக்கோம் இது கூட பண்ணாமலா''
என்று ஆயிரம் கொடுத்தேன்.இதோடு சும்மா இருந்திருக்கலாம்.
''ஆமாம் அப்படி என்ன சார் அவசரம்.. தெரிஞ்சுக்கலாமா''
'' நாளைக்கு பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட கடைசி நாள் ஆக்சுவல்லா ரெண்டாயிரம் கட்டணும் அதான்..மாச கடைசி உங்க கிட்ட இதுக்கு மேல கேட்க கூடாது மீதிக்கு நான் பார்த்துக்கிறேன்''
''என்ன சார் இது எப்படியும் இன்னும் மூணு நாள்ல திருப்பிட போறிங்க ஒரு வழியா என்கிட்டயே கேட்ககூடாதா? இன்னும் ஆயிரத்துக்கு எங்க போய் நிப்பிங்க இந்தாங்க''என்று இன்னும் ஆயிரம் கொடுத்தேன்.
அடுத்து ஒரு வாரத்துக்கு அவரை பார்க்க முடியாதபோது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.பின் எனக்கு பணமுடை வந்த போது நண்பர் ஞாபகத்துக்கு வந்தாரே ஒழிய நண்பர் நேரில் வரவில்லை.அப்போதுதான் அவர் என்னை பார்ப்பதை தவிர்க்கிராறோ என்ற ஐயம் எழுந்தது.
கடன் கொடுத்த பத்தாவது நாள் நண்பரை சந்தித்தேன்.இந்தமுறை அவரை வழக்கம் போல எதிர்கொள்ள முடியவில்லை.அவரும் குற்ற உணர்வுடனே பேசினார்.'சாரி சார்,வெளியூர் போய் இருந்தேன் அதான்'
'பரவா இல்லை சார் எனக்கு இப்ப பணம் தேவைப் படுது அதான் திருப்பிட்டிங்கன்னா பரவா இல்லை'
'சார்...இன்னும் ஒரு ரெண்டு நாள் பொறுக்க முடியுமா' என்றுஇழுத்தார்.
'இல்ல சார் மூனு நாள் சொன்னிங்க இப்ப பத்து நாளைக்கு மேல ஆச்சு' என்று முகம் பார்க்காமல் பேசினேன்.
'சொன்னேன் ஆனா முடியல,கொஞ்சம் பொறுத்துக்குங்க'
மீண்டுன் அதன் பின் அவரை பத்து நாள் பார்க்க முடியாதபோது எரிச்சல் வந்தது.எரிச்சல் ஆத்திரமாகி கோபமானது.பின் சந்தித்த நாட்களில் காரணங்கள் தான் சொன்னாரே ஒழிய பணம் வந்தபாடில்லை.'இவனுக்கு'ஏன்டா கடன் கொடுத்தோம் என்றாகிவிட்டது.கடன் வாங்கிய துரையே கடன் கொடுத்த நாயே என்பது போல நடையாய் நடந்து அவன் வீட்டில் இல்லாதபோது அவன் மனைவியிடம் கோபப்பட வேண்டியதாயிற்று.
கடைசியாய் கசப்புடன் பணம் பல தவணைகளில் வசூலிக்கப்பட்டாலும் மன உளைச்சலும் நட்பு இழந்ததும் தான் மிச்சம்.நான் கடன் கொடுத்து இழந்த நட்புகள் இதுபோல் பல.நான் இல்லை என்று நழுவி இருந்தால் அவ(ன்)ர் நட்பாவது மிஞ்சி இருக்குமோ?
நண்பர்களே...கடன் கொடுப்பது ஒரு உதவி தானே?உதவி செய்வதால் ஏன் உபத்திரவம் வருகிறது?நண்பர்களை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கடன் கொடுக்க கூடாது என்ற கசப்பான உண்மை உண்மைதானா?அல்லது கடன் கொடுத்தால் அதை மறந்து விட வேண்டுமா? ''Neither a borrower nor a lender be;loan oft loses both itself and friend'' என்பது எல்லா நேரத்திலேயும் சரியா?
இளமுருகன்
நைஜீரியா
25.01.2010
12.30.A.M.

6 comments:

Dr.P.Kandaswamy said...

பணம் கடன் கொடுத்தால் பணமும் போய் உறவும் போய்விடும். கடன் கொடுக்காவிட்டால் உறவு போய்விடும். ஆனால் நம் பணம் நம்மிடமே இருக்கும். ஆனால் இந்த உண்மையை பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//நண்பர்களை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் கடன் கொடுக்க கூடாது என்ற கசப்பான உண்மை உண்மைதானா?அல்லது கடன் கொடுத்தால் அதை மறந்து விட வேண்டுமா?//

அப்படிப் பார்த்தால் உங்களுக்கு தேவைப்படும் போது ஒருவரிடமும் நிற்கமாட்டேன் என்ற உறுதியும் கொள்ள வேண்டி இருக்குமே. கடன் கொடுப்பதும் வாங்குவதும் நாணயம் தொடர்புடையது, மனிதர்களுக்கிடையே அது வேறுபடும் மற்றபடி கடன் கொடுப்பதும் வாங்குவதும் ஒரு செயல் தான், அதை ஒருசிலருடன் பொறுத்திப் பார்த்து தீர்ப்பு சொல்வது(ம்) சரி இல்லை என்றே நினைக்கிறேன்

இளமுருகன் said...

வருகைக்கு மிக்க நன்றி அய்யா
உங்கள் கருத்துகளும் உண்மைதான்

பட்டாபட்டி.. said...

இது எல்லாருடைய வாழ்கையிலும் நடக்கும் நிகழ்ச்சி தான்..

பணமா ? இல்லை உறவா ?.. கண்டிப்பாக இரண்டையும் ஒருசேரப் பார்க்கமுடியாது..

சில சமயம் உண்மையான சூழ் நிலையைக்கூட சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டிய நிலைமை..

Punnakku Moottai said...

இளமுருகன்,
நான் உங்கள் கருத்தை முற்றிலும் ஏற்பதற்கு இல்லை. சிலவற்றில் வேறுபடுகிறேன்.
முதலில், அவரின் தேவை உண்மைதானாஎன்று கண்டறறின்தீரா?
உண்மையில் அவர் நாணயமானவராக இருந்து, உங்களிடம் கடன் பட்ட பின், சூழ்நிலை காரணமாக கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல், உங்களை தவிர்த்து இருக்கலாம் அல்லவா?
எதுவாக இருப்பினும், நீங்கள் அவர், யோக்கியமானவர் என்றறிந்தபின் தான் 1000 திக்கு பதிலாக 2000 கொடுத்தீர்கள். இல்லை என்றால், அது உங்கள் தவறு.
குற்றவாளிகள் பல வகையாக இருந்தாலும் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கலாம்.
ஒன்று - Addicted Criminals என்று சொல்ல கூடிய core கிரிமின்லஸ், இரண்டு - சந்தர்ப்பவாத குற்றவாளிகள்,
மூன்றாவதாக - சூழ்நிலை குற்றவாளிகள்.
முதலாவதை பற்றி சொல்ல தேவை இல்லை. மற்ற இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சந்தர்ப்பம் கிடைத்து, தேவைப்படின் குற்றம் புரியும் நோக்குடன் குற்றம் புரிதல் இரண்டாவது வகை. தண்டிக்கபடவேண்டியவர்கள்.
மூன்றாவது சூழ்நிலை காரணமாக குற்றம் புரிவது. குற்றம் புரிவது அவன் வேலையும் அல்ல, சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை தவிர்ப்பவன். ஆனால் அப்படி பட்ட ஒருவன், சூழ்நிலை காரணமாக குற்றம் புரிந்தால், அவன் தெளிந்த அறிவு உள்ளவனாக இருந்தால், அந்த குற்றத்திற்கு அங்கேயே முற்றுபுள்ளி வைப்பான். இந்திய குற்றவியல் சட்டம் கூட இக்குற்றத்திற்கு மன்னிப்பு வழங்கும். (First Instance Criminals in Indian Penal Code ) தெளிந்த அறிவு இல்லாதவன் அக்குற்றத்தை மறைக்க மேலும் குற்றம் புரிவான். உங்கள் முன்னாள் நண்பரை போல ஓடி ஒளிவது, பொய் சொல்வது, etc . குற்றத்தின் தன்மை பொருத்து மன்னிக்க அல்லது (சிறிது) தண்டிக்க படலாம்.
நீங்கள், உங்கள் நண்பர் இதில் எவ்வகை என்றறிந்து அவரை மன்னிப்பதா அல்லது புலம்புவதா (வேறு என்ன செய்ய முடியும்) என்று பாருங்கள். எனகென்னவோ அவர் தெளிந்த அறிவில்லாத மூன்றாவது வகை குற்றவாளி போல் தோன்றுகிறது. அவர் மன்னிக்கபடலாம் என்றே தோன்றுகிறது.
பண்புடன் வழ நினைக்கும் (ஆனால் முடியவில்லை),
பாலமுருகன்,
+234 708 999 6984 .

இராகவன் நைஜிரியா said...

வாழ்க்கையில் பலருக்கும் இது நடப்பதுதான்.

இப்போதெல்லாம் நான் இதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. கூடியவரை தவிர்த்து விடுவேன். தவிர்க்க இயலாத சந்தர்பங்களில், பேருக்கு எதாவது கொடுத்துவிட்டு, அத்துடன் மறந்து விடுவேன்.

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்