வாங்க.. வாங்க... வாங்க....

Saturday, April 24, 2010

நச்சு எண்ணம்

சமீபத்தில் தினசரிகளில் நான் படித்த இந்த செய்திகள் என்னை அதிர வைத்ததோடு வருத்தப்படவும் செய்தது.அதை உங்களோடு பகிரத்தான் இந்த பதிவு.


 கேரளாவில் இருந்து செருப்புக் கழிவுகளை தமிழகத்தின் கோவை மாவட்ட எல்லையில் கொண்டு வந்து லோடுலோடாக கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறார்கள் என்று ஒரு செய்தி.

சிங்காரச் சென்னை என்றும் கூவத்தை சுத்தப்படுத்துகிறோம் என்றும்  கோடி கோடியாய் ஒரு பக்கம் செலவழித்துக்கொண்டிருக்க கோவையில் இப்படி சந்தடி இல்லாமல் இரவில் கேரளா குப்பையை கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.இதை இப்போதே தடுப்பதை விட்டுவிட்டு பின் இதற்கும் கோடிகளை செலவழிக்கப்போகிறோமா? இதையே வேறு மாநிலத்தில் போய் செய்ய துணிவிருக்குமா அல்லது நாம் இப்படி செய்தால் சும்மா விட்டு விடுவார்களா?
வந்தாரையெல்லாம் வாழவைத்துக்கொண்டிருக்கும் நமக்கு கிடைக்கும் பரிசுதான் இதுவா? யாரோ எப்படியோ போகட்டும் நாம் நன்றாய் இருந்தால் போதும் என்ற ஈன எண்ணம்தானே இது?



மலேசியா,சவூதி அரேபியா மற்றும் பார்சிலோனியா ஆகிய நாடுகளில் இருந்து பல டன் குப்பை மற்றும் நச்சுக் கழிவுகளை கப்பல் மூலம் ஏற்றி இந்தியாவில் வந்து கொட்டப்படுகிறது என்று மற்றொரு  செய்தி.

இதன்  முன்னணி பின்னணி எதுவாகவேனும் இருந்து விட்டு போகட்டும், முதலில் இவர்கள் இந்தியாவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், இந்தியாவைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இந்தியா என்ன குப்பை கிடங்கா? இதெற்கெல்லாம் இடம் கொடுத்தது எது,யார்? சுற்றுச்சூழல்பாதுகாப்பு  துறை என்ன செய்கிறது? இனிமேலேனும் இதை தடுக்க போகிறார்களா இல்லையா? நச்சு பொருள்களை இறக்குமதி செய்வானேன் பின் நோய் பரவி இறப்பவர்க்கு லட்சலட்சமாய் நிவாரணம் கொடுப்பானேன்?

ஐயா அரசியல்வாதிகளே, கொஞ்சமாவது வாங்கும் சம்பளத்திற்கு அல்லது லஞ்சத்திற்கு ஏதாவது நாட்டு மக்களுக்கு நல்லது செய்து அடுத்த ஜென்மத்திற்காவது புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்.உங்களுக்கு ஓட்டு போட இந்த மக்கள் வேண்டும் அதற்காகவாவது இவர்களை காப்பற்றக்கூடாதா?


இளமுருகன்
நைஜீரியா.  24.04.20010  4.30 p.m.

Thursday, April 8, 2010

விடுமுறையின் வடு

ஆறு மாதத்திற்கு பின் மீண்டும் சொந்த ஊரில் கால் பட்டதும் அந்த சுகமான உணர்வு பாதம் தொடங்கி உச்சி தொட்டது.ஒவ்வொரு முறை கிளம்பும் போதும் ''இதுதான் கடைசியோ'' என்ற அபத்தமான பதைபதைப்பு வந்து அடங்கும்.இதனாலேயே பஸ் ஏறி விடை பெறும்போது கண் மறையும் வரை ஊரை பார்த்து உள்வாங்கி கொள்வது இயல்பு.

மெல்ல நான்கு புறமும் திரும்பி பார்த்தேன், மரங்கள் குறைந்து மாளிகைகள் வளர்ந்திருந்தன.வாகனப் பெருக்கம் தெரிந்தது.வலப்பக்கத்தில் நான் ஆறாவதிலிருந்து பன்னிரெண்டு வரை படித்த பள்ளிக்கூடம் இருந்தது.அந்த ஏழு வருடங்கள் தான் எப்படி எப்படி கழிந்தன.அங்கு கற்றதும் பழகியதும் தான் எத்தனை எத்தனை .ஒரு நாள் போய் அந்தந்த வகுப்பில் நான் அமர்ந்திருந்த இடங்களில் ஓரிரு நிமிடமாவது மீண்டும் அமர்ந்து பார்த்து விட வேண்டும். ம்ம்ம்...காலம் என்பது விநாடிகளாலும் நிமிடங்களாலும் ஆனது அல்ல ...அது நினைவுகளால் ஆனது!

பஸ்  நிறுத்தத்தில் இருந்து வீடு ஒன்றரைக் கிலோ மீட்டர்.மெல்ல நடந்தேன்.வழியில் சில பள்ளி நண்பர்களை பார்த்தேன்.''சரி இப்போதான் வரே...ரெஸ்ட் எடு ,பிறகு பார்க்கலாம் '' என்று அனுப்பி வைத்தார்கள்.என் பதினைந்து நாள் விடுப்பில் அந்த ''பிறகு'' வாய்க்கவே இல்லை.வீடு நெருங்குகையில் ,ஒரு புது மணப்பெண் முதன் முதலாய் கணவன் வீட்டை பார்க்கும் குறுகுறுப்பு ,ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது.வாசலிலேயே அப்பா,அம்மா,மனைவி மற்றும் மகன் அனைவரும் காத்திருந்தனர்.இவர்களையெல்லாம் விட்டு விட்டா இருக்கிறோம் என்ற எண்ணம் வந்து வதைத்தது.

ஊரிலும் உலகிலும் எத்தனையோ மாறி இருந்த போதும் அம்மாவின் அன்பு மட்டும் அப்படியே இருந்தது.வெயில்நாளாய் இருந்தாலும் உடம்புக்கு ஒத்துக்காதோ என வென்னீர் வைத்து கொடுப்பது,முதுகு தேய்த்து விடுவது,சாப்பிடும்போது போதும் என்ற பிறகும் ஒரு பிடி அள்ளி போடுவது,அரிதாகிப்போன கம்மஞ்சோறு ,கேழ்வரகு ஆக்கி அதற்கு முருங்கை கீரை கூட்டு வைப்பது,எள் உருண்டை செய்து தருவது ,வித விதமாய் ஊறுகாய் செய்து தருவது ...இவ்வளவு கஷ்டத்தில் அந்த தாய்க்கு என்னதான் சந்தோசமோ?

ஒரு  நாள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்து வரை படித்த ஆரம்பப் பள்ளிக்கு சென்று வந்தேன்.காலேஜில்,கம்பனியில் என்று நட்புகள் இருந்தாலும் வாழ்நாளில் மறக்கவே முடியாத நண்பர்கள் இந்த ஆரம்பப் பள்ளி நண்பர்கள்தான்.வெகு சிலரே ஊரில் இருந்தார்கள்.

எதிர்கால்  கனவுகளுக்காக
நிகழ்கால  சுகங்கள் இழக்கையில்
இறந்தகால  நினைவுகளை அசைபோடும் மனசு.

என் செல்ல மகன் என்னுடன் ஒட்ட இரண்டு மூன்று நாட்களாகியது. பலமுறை அப்பா என்றழைப்பதற்கு பதில் தாத்தா என்றே(என் அப்பாவிடம் வளர்வதால்) வாய் தவறி என்னைஅழைத்தபோது நான் எவ்வளவு தூரம் அவனை விட்டு விலகி இருக்கிறேன் என்பது 'சுரீர்' என சுட்டது.நான் அருகில் இல்லாததால் அவன் அப்பா என்றழைக்க வாய்ப்பில்லாமல் போன வருத்தமும் ஏக்கமும் தெரிந்தது.



ஊருக்கு வரும் நாள் நெருங்க நெருங்க மன பாரம் கூடிக்கொண்டே போயிற்று.தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாய வலையில் சிக்கி கொண்டாயிற்று.உடல் ஓரிடம் உயிர் ஓரிடம் என வாழ்கை ஆகிப்போனது. இரவு படுக்கையில் மகனிடம் சொன்னேன்:
'அகிலன் ,அப்பா நாளைக்கு ஊருக்கு போறேன்,நீ அழாம நல்ல பையனா இருக்கணும் என்ன?'
'சரிப்பா'
'அப்பா வரும்போது உனக்கு என்ன வாங்கியாரனும்?'
'அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா.. நீ போறதுக்கு முன்ன இன்னைக்கு சாயங்காலம் சைக்கிள்ல உட்கார வைச்சு ஒரு ரவுண்டு அடிச்சியே அது மாதிரி காலையில நான் ஸ்கூல் போறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு அடிகிறயா?'
'கண்டிப்பா, இப்ப தூங்கு'  தூங்கிப்  போனான் .
விடியற்காலை உச்சா விட எழுந்தவன் ''அப்பா மறக்காம ஒரு ரவுண்டு அடிக்கணும்,என்ன?' என்று விட்டு மீண்டும் தூங்கிப் போனான்.


காலையில் எழுந்து வழக்கமான அவசரத்தில் சூட் கேஸ்  நிரப்பி,பணம்,பாஸ்போர்ட் பத்திரப்படுத்தி சொந்தங்களுக்கு போன் செய்து விடை பெற்று  மகனையும் ஸ்கூல் பஸ் ஏற்றி விட்டு நானும்  புறப்பட்டு விமானம் பிடித்து நைஜீரியா வந்து சேந்து விட்டேன்.

போன்  செய்த போது மகன் ''தாத்தா..ச்சே...அப்பா என்னை சைக்கிள்ல ரவுண்டு அடிக்கிறன்னுட்டு அடிக்காமையே போயிட்டியே...'' என்றபோது மட்டுமல்ல இதோ இதை எழுதுகிற போது கூட கண்ணீர் முட்டுகிறது.

அன்புடன்...
இளமுருகன்

நைஜீரியா
08.04.2010  7.00 p.m.

இன்றைய தலைப்பு செய்திகள்