வாங்க.. வாங்க... வாங்க....

Thursday, April 8, 2010

விடுமுறையின் வடு

ஆறு மாதத்திற்கு பின் மீண்டும் சொந்த ஊரில் கால் பட்டதும் அந்த சுகமான உணர்வு பாதம் தொடங்கி உச்சி தொட்டது.ஒவ்வொரு முறை கிளம்பும் போதும் ''இதுதான் கடைசியோ'' என்ற அபத்தமான பதைபதைப்பு வந்து அடங்கும்.இதனாலேயே பஸ் ஏறி விடை பெறும்போது கண் மறையும் வரை ஊரை பார்த்து உள்வாங்கி கொள்வது இயல்பு.

மெல்ல நான்கு புறமும் திரும்பி பார்த்தேன், மரங்கள் குறைந்து மாளிகைகள் வளர்ந்திருந்தன.வாகனப் பெருக்கம் தெரிந்தது.வலப்பக்கத்தில் நான் ஆறாவதிலிருந்து பன்னிரெண்டு வரை படித்த பள்ளிக்கூடம் இருந்தது.அந்த ஏழு வருடங்கள் தான் எப்படி எப்படி கழிந்தன.அங்கு கற்றதும் பழகியதும் தான் எத்தனை எத்தனை .ஒரு நாள் போய் அந்தந்த வகுப்பில் நான் அமர்ந்திருந்த இடங்களில் ஓரிரு நிமிடமாவது மீண்டும் அமர்ந்து பார்த்து விட வேண்டும். ம்ம்ம்...காலம் என்பது விநாடிகளாலும் நிமிடங்களாலும் ஆனது அல்ல ...அது நினைவுகளால் ஆனது!

பஸ்  நிறுத்தத்தில் இருந்து வீடு ஒன்றரைக் கிலோ மீட்டர்.மெல்ல நடந்தேன்.வழியில் சில பள்ளி நண்பர்களை பார்த்தேன்.''சரி இப்போதான் வரே...ரெஸ்ட் எடு ,பிறகு பார்க்கலாம் '' என்று அனுப்பி வைத்தார்கள்.என் பதினைந்து நாள் விடுப்பில் அந்த ''பிறகு'' வாய்க்கவே இல்லை.வீடு நெருங்குகையில் ,ஒரு புது மணப்பெண் முதன் முதலாய் கணவன் வீட்டை பார்க்கும் குறுகுறுப்பு ,ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது.வாசலிலேயே அப்பா,அம்மா,மனைவி மற்றும் மகன் அனைவரும் காத்திருந்தனர்.இவர்களையெல்லாம் விட்டு விட்டா இருக்கிறோம் என்ற எண்ணம் வந்து வதைத்தது.

ஊரிலும் உலகிலும் எத்தனையோ மாறி இருந்த போதும் அம்மாவின் அன்பு மட்டும் அப்படியே இருந்தது.வெயில்நாளாய் இருந்தாலும் உடம்புக்கு ஒத்துக்காதோ என வென்னீர் வைத்து கொடுப்பது,முதுகு தேய்த்து விடுவது,சாப்பிடும்போது போதும் என்ற பிறகும் ஒரு பிடி அள்ளி போடுவது,அரிதாகிப்போன கம்மஞ்சோறு ,கேழ்வரகு ஆக்கி அதற்கு முருங்கை கீரை கூட்டு வைப்பது,எள் உருண்டை செய்து தருவது ,வித விதமாய் ஊறுகாய் செய்து தருவது ...இவ்வளவு கஷ்டத்தில் அந்த தாய்க்கு என்னதான் சந்தோசமோ?

ஒரு  நாள் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்து வரை படித்த ஆரம்பப் பள்ளிக்கு சென்று வந்தேன்.காலேஜில்,கம்பனியில் என்று நட்புகள் இருந்தாலும் வாழ்நாளில் மறக்கவே முடியாத நண்பர்கள் இந்த ஆரம்பப் பள்ளி நண்பர்கள்தான்.வெகு சிலரே ஊரில் இருந்தார்கள்.

எதிர்கால்  கனவுகளுக்காக
நிகழ்கால  சுகங்கள் இழக்கையில்
இறந்தகால  நினைவுகளை அசைபோடும் மனசு.

என் செல்ல மகன் என்னுடன் ஒட்ட இரண்டு மூன்று நாட்களாகியது. பலமுறை அப்பா என்றழைப்பதற்கு பதில் தாத்தா என்றே(என் அப்பாவிடம் வளர்வதால்) வாய் தவறி என்னைஅழைத்தபோது நான் எவ்வளவு தூரம் அவனை விட்டு விலகி இருக்கிறேன் என்பது 'சுரீர்' என சுட்டது.நான் அருகில் இல்லாததால் அவன் அப்பா என்றழைக்க வாய்ப்பில்லாமல் போன வருத்தமும் ஏக்கமும் தெரிந்தது.



ஊருக்கு வரும் நாள் நெருங்க நெருங்க மன பாரம் கூடிக்கொண்டே போயிற்று.தெரிந்தோ தெரியாமலோ ஒரு மாய வலையில் சிக்கி கொண்டாயிற்று.உடல் ஓரிடம் உயிர் ஓரிடம் என வாழ்கை ஆகிப்போனது. இரவு படுக்கையில் மகனிடம் சொன்னேன்:
'அகிலன் ,அப்பா நாளைக்கு ஊருக்கு போறேன்,நீ அழாம நல்ல பையனா இருக்கணும் என்ன?'
'சரிப்பா'
'அப்பா வரும்போது உனக்கு என்ன வாங்கியாரனும்?'
'அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா.. நீ போறதுக்கு முன்ன இன்னைக்கு சாயங்காலம் சைக்கிள்ல உட்கார வைச்சு ஒரு ரவுண்டு அடிச்சியே அது மாதிரி காலையில நான் ஸ்கூல் போறதுக்கு முன்னால ஒரு ரவுண்டு அடிகிறயா?'
'கண்டிப்பா, இப்ப தூங்கு'  தூங்கிப்  போனான் .
விடியற்காலை உச்சா விட எழுந்தவன் ''அப்பா மறக்காம ஒரு ரவுண்டு அடிக்கணும்,என்ன?' என்று விட்டு மீண்டும் தூங்கிப் போனான்.


காலையில் எழுந்து வழக்கமான அவசரத்தில் சூட் கேஸ்  நிரப்பி,பணம்,பாஸ்போர்ட் பத்திரப்படுத்தி சொந்தங்களுக்கு போன் செய்து விடை பெற்று  மகனையும் ஸ்கூல் பஸ் ஏற்றி விட்டு நானும்  புறப்பட்டு விமானம் பிடித்து நைஜீரியா வந்து சேந்து விட்டேன்.

போன்  செய்த போது மகன் ''தாத்தா..ச்சே...அப்பா என்னை சைக்கிள்ல ரவுண்டு அடிக்கிறன்னுட்டு அடிக்காமையே போயிட்டியே...'' என்றபோது மட்டுமல்ல இதோ இதை எழுதுகிற போது கூட கண்ணீர் முட்டுகிறது.

அன்புடன்...
இளமுருகன்

நைஜீரியா
08.04.2010  7.00 p.m.

27 comments:

Unknown said...

y u didnt bring ur fmly??? :-((

நேசமித்ரன் said...

கழிவறையில் உன் பிம்பத்தோடு
நிகழ்கிறது என் தாம்பத்யம்

காகங்களற்ற இத் தேசத்தில்
கரன்சி காமம் தரும்
பொய் சந்தோசம்
மின்னும்
மியுச்சுவல் பண்டு வட்டி,ஷேர் காசு
வீடு,நிலம்
யாவும்
சத்தம் மட்டும் உள்ள செல் போன் முத்தம்

இளையராஜா பாட்டு
வைரமுத்து கவிதை
உன் நினைவின் ரணம் அழிக்க மது….

தொலையும் இளமை
பிள்ளைகளுக்கான அண்மைய
தனிமை தாளிக்கும் இரவு
நான் இருக்கையில் ஆடை சரி செய்து விரையும் பால்காரன்
மணி சப்தம் போல்
கடன் கேட்கும் சொந்தங்கள் உறவு…
நிர்வாணமாய் நிற்கும் பத்திரிகை வைத்த திருமண
மேடைகள்
அந்தரங்கம் பகிர விடாத
திருந்தாத இன்டர்நெட் திருடர்கள்
சூனியத்தில் கூடு கட்டும்
தன் எச்சிலில் தன் உலகம்
செய்யும் சிலந்தி வாழ்கை உனது

அறிவேன் என் செல்லமே

கற்புள்ள உன் யோனி சுரக்கும் ஒரு துளி
கடவுளின் கண்ணீர்

நான் வாடகை தாய்…!
ஆயுள் தண்டனை விதிக்க பெற்ற கூட்டு புழு
ஜனனத்திற்கும் மரணத்திற்கும் விடுமுறை பிச்சைகேட்கும்
யாசகன்..
காதல் மிதா...
நாளைய சாவுக்கு இன்றே எரியும் பிரேதம் நான்
உணர்.....
இது பசிபிக்
சாலமோன்
பயணம்.....!


இளமுருகன் இந்தக் கவிதை இப்படியோர் மன் நிலையில் எழுதப்பட்டதுதான் வெகு நாட்கள் முன்
உங்களுக்காக மீண்டும்....

நேசமித்ரன் said...

மிக நெருக்கமானதுமொரு உணர்வையும் என்னவோ உள்ளே உடைவது போலவும் சிகரெட்டுக்கு விரல்கள் சட்டைப்பையை தடவும் இந்த நிமிஷம் உணரத்தந்திருக்கிறது இந்த இடுகை

ம்ம் எல்லம் சரியாய்டும் தலைவரே
எழுதுங்க
நல்லா இருக்கு முன்னைக்கு இப்போ மொழி

இளமுருகன் said...

//Lalitha said...

y u didnt bring ur fmly??? :-((//

வருகைக்கு நன்றிங்க.நைஜீரியாவில் நான் இருக்கும் இடம் அப்படி

இராகவன் நைஜிரியா said...

இதுதான் நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முருகன். இந்த கஷ்டத்தை நானும் 5 வருடங்கள் அனுபவித்தேன். கொடுமை அது...

ஊருக்கு இப்போதுதான் வந்த மாதிரி இருக்கும்... உடனே திரும்ப வேண்டிய நாள் வந்துவிடும்.

ஆறாத இரணங்கள் இவை.

இளமுருகன் said...

//நேசமித்ரன் said...
இளமுருகன் இந்தக் கவிதை இப்படியோர் மன் நிலையில் எழுதப்பட்டதுதான் வெகு நாட்கள் முன்
உங்களுக்காக மீண்டும்....//
மிக்க நன்றிங்க சார். உங்கள் கவிதையும் வருகையும் என் தளத்திற்கு மெருகூட்டுகிறது

இளமுருகன் said...

//இராகவன் நைஜிரியா said...

இதுதான் நாம் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முருகன். இந்த கஷ்டத்தை நானும் 5 வருடங்கள் அனுபவித்தேன். கொடுமை அது...//

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க சார்

இளமுருகன் said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு முன்னைக்கு இப்போ மொழி //

ஒரு பெரும் மாய எழுத்து கவிஞரே சொல்கிறீர்கள் என்றால்...ஆஹா...இனி அடித்து நொறுக்க வேண்டியதுதான்

பாராட்டுக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி.

Unknown said...

சற்று சிரமந்தான். நாங்கள் இங்கேயே இருந்தாலும் ஞாயிறு மட்டுமே சிறிது நேரந்தான் குழந்தைகளுடன் விளையாட நேரம் கிடைக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே.

இளமுருகன் said...

//வாய்ப்பாடி குமார் said...
பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே//

வருகைக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றி.

சசிகுமார் said...

படிக்கும் எனக்கே அந்த குழந்தையின் வலி புரிகிறது நண்பா, சீக்கிரம் அவன் ஆசையை நிறைவேற்று

இளமுருகன் said...

வருகைக்கு நன்றி சசிகுமார்

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான பகிர்வு,முருகன்.

நைஜீரியா என்றதுமே நண்பனையும்(நேசன்),ராகவன் அண்ணாச்சியும் நினைவு வந்து,வந்தேன்...

அவன் கவிதையும் வாசிக்க வாய்த்ததில் மிகுதி சந்தோசம்.

பையன் புகைப்படம் அருமை.

இளமுருகன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பா.ரா. சார்

Matangi Mawley said...

really interesting blog!

இளமுருகன் said...

நன்றிங்க மாதங்கி
வருகைக்கு நன்றி

Nathanjagk said...

தாத்தா என்றழைக்கும் மகன் என்ற இடத்தில் உறைந்து​போகிறேன். உருக்கமான ​நெருக்கமான பதிவு முருகன்!

இளமுருகன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெகன் சார்

CS. Mohan Kumar said...

பதிவு மனதை ரணபடுத்துகிறது... ஒரு விதத்தில் தூரத்தில் வாழும் உங்களுக்கு பதிவுலகம் ஒரு outlet ஆக இருக்கும் என நினைக்கிறேன்

இளமுருகன் said...

உண்மைதான் மோகன் சார்.
உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

மெல்லினமே மெல்லினமே said...

manathai thotta pathivu!
good!

இளமுருகன் said...

//மெல்லினமே மெல்லினமே said...

manathai thotta pathivu!
good//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

yenshri said...

விடுமுறையின் வடு.
கொஞ்சம் கணம் தான்.
மனதை தொடுகிற எழுத்துக்களை
கற்றுக்கொள்ள விரும்புகிறேன்
.. வாழ்த்துக்கள் நண்பரே

இளமுருகன் said...

//yenshri said...

விடுமுறையின் வடு.
கொஞ்சம் கணம் தான்.
மனதை தொடுகிற எழுத்துக்களை
கற்றுக்கொள்ள விரும்புகிறேன்
.. வாழ்த்துக்கள் நண்பரே //

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
மனதை தொடுகிற எழுத்துகள் எல்லாம் சொந்த அனுபவத்தால் மட்டுமே வரக்கூடியவை

cheena (சீனா) said...

பின் தொடரவதற்காக

cheena (சீனா) said...

அன்பின் இளமுருகன் - மூன்றாண்டுகளாக எழுத வில்லையே ஏன் ? எங்கிருக்கிறீர்கள் - தாயகமா - நைஜீரியாதானா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

Nice feel

Post a Comment

ஏதாவது சொல்லிட்டுப் போங்க சார்...

இன்றைய தலைப்பு செய்திகள்